Wednesday 9 March 2011


வீணான விழுதுகள்....?!


ஏனோ நிகழ்ந்த கசப்புகளாய்...
காணாமல் போன தடயங்களாய்...
வீணான விழுதுகள்...!
கபட அரசியலும்
கலப்பட மனசாட்சியும்
கலவரங்களை கல்வியாக்கி
கல்லறையை நிரப்புகிறதெனும்
நிலவரம் உணர்ந்த பின்னும்...
"நான் மௌனமாக அழுதது யாரறிவாரென
மீன் போல் ஒப்புமை செய்தாயே....
முள்ளி வாய்க்காலில் முகம் புதைத்து
கொள்ளி வைத்தனர் தமிழருக்கு!
எள்ளி நகைக்குது - சிங்களம்
தள்ளி நடிக்குது - தமிழ் வளம்!
உறவு பயிர்த்தெழுந்த உன்னில்
உரிமை உயிர்த்தெழும் முன்னே
உண்மை உயிர் விட்டதென்னே...

பிணமான தாயின் மார்பில் முகம் தோய்த்து
பசியில் பால் கேட்கும் பச்சிளம் மழலை -
குருதி குடிக்கும் புவியின் ஆழத்தினூடே
தியாகம் செய்த தாய்மை உயிரை
தேடுகிறது... செத்தது தாயா? தமிழா?
நீள் உலகெங்கும் நிரம்பியிருக்கும்
கூட்டத்திற்கு... ரணங்களின்
வடுக்களே அடையாளமாய்....!
சங்கம் வைத்து
தமிழ் விதைத்து
அகம் குளிர்ந்து
முகம் மலர்ந்தோம்.
பொன்னான பொழுது அது.
அழகு எனும் அலங்கோலம்...
நிகழ்ச்சி எனும் நிர்வாணம்...
இலக்கணம் இறந்தது.
தமிழும் மறந்தது.
வீணான விழுது இது.
பத்து திங்கள் சுமந்திருந்து
பசித்திருந்து பாலூட்டி
கண்விழித்து ஒளிகொடுத்த
தாயையே பிணமாக்கி
விட்டது - "மம்மி" என
அழைக்கும் குழந்தையின்
ஓர்சொல்!
வீணானது குழந்தையெனின்
பிணமானது தாயா? தமிழா?
காற்றிலே பறந்த மிதவை
தரையிறங்கி தடுமாறியது.
மிச்சமானது சிதிலங்கள்...!
எச்சமானது ஓலங்கள்...!
உயிரின் விலை 80 லட்சம்
உறவின் விலை எவ்வளவோ?!

நீண்டு படர்ந்த புகைவண்டி -
குண்டு வெடித்து தெறித்தது.
மாண்ட உயிருக்கு 5 லட்சம்
மீண்ட உயிருக்கு 1 லட்சம்
கொண்டு வைத்தவனின் விலை என்ன?!
ஏனோ நிகழ்ந்த கசப்பால்
காணாமல் போனது உயிரெனின்
வீணானது எது?
வாழ்க்கையா... வசந்தமா...???
யாத்திரை எனும் சூத்திரமுண்டு;
கலகம் செய்யும் அரசியல்வாதிக்கு!
ஒழுங்கான கருத்து ஒருமிக்கவில்லை.
தெலுங்கானா கழுத்து இறுகுது.
இன்று படித்தது 2 பேர் தற்கொலை...
என்று முடியும் அரசியல் விற்பனை.

பிரிவினை பாராமல் சுமந்த பேருந்திற்கு
அழிவினை நேருது; எரிவது நெருப்பு!


கயவனின் கலை
கொள்ளையும் கொலையும்!
12 -ல் நுழைந்திடும் முன்னே
16-ல் வீழ்ந்தது பெண்ணே.
தளிரொன்று நிர்வாணமாய்...
நீர்த்தொட்டியில் பிணமாய்!
வீணான விழுதே...
காயப்பட்டது கற்பா? கல்வியா???

No comments:

Post a Comment