Wednesday 9 March 2011



ரமலான்!



கவின் மிகு புவியில்
விலை மிகு கலையாய்
பிரபஞ்ச பேரரசன் 
விதைத்திட்ட
புதையல்- ரமலான்!

கரைந்து போகும் சுவாசக் காற்றுக்கும் 
அணைந்து போகும் மூச்சு நெருப்புக்கும் 
வற்றிப் போகும் பேச்சு நீருக்குமிடையில்...

வகை வகையான ஊண் மறந்து 
ஈகை செய்து இன்புற்று 
தொகை தொகையாய் நன்செய்து
வாகை சூடுவதே- ரமலான்!

கூரான இறை சிந்தை 
கூர்தீட்டிய ஈட்டியையும் மழுங்கச் செய்யும்!

மாண்புமிகு மானிடர்களின் 
மார்க்கப் பேருரையால்
தூண் போன்று சமூகத்தை 
ஓர் கோவையில் திரட்டி 
பார் போற்றும் பண்புகளை 
கார் மேகமாய் பொழிந்து 
யார் நோக்கம் என்னவென்று 
மார் தட்டி முழங்குவது- ரமலான்!

கூழுண்டு வாழ்க்கை பிழைப்போருக்கு 
நானுண்டு தானம் செய்திடவென்று 
வாரி வழங்கும் பாரிக்கூட்டமாய்- ரமலான்
ஏறி நிற்குமிடம் சிகரமன்றோ?!

திங்கள் பார்த்து நோன்புற்று 
திங்கள் பார்த்து இன்புற்ற ரமலான் 
ஆயிரம் திங்களினும் வைரமன்றோ?!

வீரத்தின் முதல் பிறையாய்
தீரத்தின் முழு குரலாய் 
போரிட்ட ரமலான்...

இஸ்லாத்தின் சொத்தல்லவா?!
ஈமானின் வித்தல்லவா?!
விலை சொல்லவியலா முத்தல்லவா?!

கொள்கைகளை விட்டுவிட்டு 
எள்ளி நகைத்தாடி 
உள்ளங்களை வதைத்தோரை
கிள்ளியெறிந்தது- ரமலான்!

உன்னத சுவனமாம்
ஜன்னத்துல் பிர்தௌஸை
என்னாலே பெற்றிடென 
முன்னே நிற்பது- ரமலான்!

அறங்களும் அமைதிகளும் 
அடிப்படை வாழ்வென 
ஆர்ப்பரிக்கும் குர்ஆனை
அவனிக்கு அருளிய 
அற்புத திங்கள்- ரமலான்!

புலமைகளுக்கெல்லாம்
தலைமை புரிந்த அரபிமொழியில் 
'குர் ஆன் அமுதசுரபி'
பெருந்தேனாய் ஓடிட 
செருக்கு பூண்டது- ரமலான்!

மனிதங்களின் முன்னோடி 
புனிதங்களின் கண்ணாடி- ரமலான்!
ஞானங்களின் தொட்டிலில் 
கானங்கள் இசைப்பது- ரமலான்!
இதயங்களே இல்லா வாழ்க்கையில்
இமயமாய் நிற்பது- ரமலான்!

எண்ணற்ற மனங்களை 
மென்மையாய் அரவணைத்து..
'இஹ்திகாப்' எனும்
பக்தியில் நனைத்து 
சத்தியமாவதே- ரமலான்!

'லைலத்துல் கத்ர்' என்ற 
வானத்தின் சுடரொன்று 
வையத்தில் படர்ந்தெரிந்து..

மன இருளின் துயர் நீக்கி 
மறை அருளின் புகழ் நோக்கி
இறை 'ரஹ்மான்' துதிபாடி
நிறைவான அமிழ்தத்தின் 
பிறையாக ஒளிர்வதே- ரமலான்!

இவ்வினிய பெருநாளில்...

ஈந்துவக்கும் சமுதாயம் செழிக்க 
ஏந்திடுவோம் கைகள் இறையிடம்- வந்தனமாய்!!
மாந்தரினத்தின் ஒற்றுமை கொழிக்க 
சாந்தம் வளர்த்து மணப்போம்- சந்தனமாய்!!!

No comments:

Post a Comment