Tuesday 8 March 2011



ஆயுதம்!




ஏ! வாள் முனையே!
என் கூர் முனையே!

தமிழைக் காதலிக்கச் செய்ததில்
நீயும் ஓர் ஆதாரம்...! நீதானே
எந்தன் கூடாரம் ...! நீ சிந்தும்
கவி தானே என்றுமென் ஆகாரம்!

கடந்ததையும்...கடக்கவிருப்பதையும்
கனவாக நினைத்தால்...கடக்கின்ற
ஒவ்வொரு தருணமும் கருகிடுமே...
நிகழ் காலம் செவ்வனே செய் - என்று
கற்பித்தது நீ தானே!

கர்ப்பக் கிருகத்திலிருந்து
அற்பக் கிரகத்திற்கு வெளிவந்த
நாள் முதல்...!

எங்கு நோக்கினும்
ஆயுதம் தாங்கிய போராட்டம்!

அம்பு முதல் அமிலம் வரை...
ஆயுதம்!
ஈட்டி முதல் தோட்டா வரை...
ஆயுதம்!
வெடிகுண்டு முதல் அணுகுண்டு வரை...
ஆயுதம்!

பேனா ஆயுதம்
வானம் தாண்டித் துளைக்கும்...
கூர் மழுங்குவதில்லை!
மரபுக்கவி தொட்டு
ஹைக்கூ வரை...
இலக்கணம் முதல் 
இலக்கியம் வரை...
வாழ்க்கை துவங்கி
வரலாறு வரை...!

பேனா கண்டிடாத ஞானமா!
புலவன் விளம்பாத தத்துவமா?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
கவிஞனுக்கு நீயே ஆயுதம்!

No comments:

Post a Comment